ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில், கைப்பந்து விளையாட்டிலும் லீக் போட்டி முறை அறிமுகம் ஆகிறது. முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி இன்று (சனிக்கிழமை) இரவு கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இன்று முதல் வருகிற 13-ந் தேதி வரை லீக் ஆட்டங்கள் கொச்சியிலும், வருகிற 16-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 3 லீக் ஆட்டம் மற்றும் அரைஇறுதி, இறுதிப்போட்டி ஆகியவை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கிலும் அரங்கேறுகிறது. தினசரி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

ஒவ்வொரு ஆட்டமும் 5 செட்கள் கொண்டதாகும். லீக் சுற்றில் முதலில் 15 புள்ளியை எட்டும் அணி செட்டை வென்றதாக கணக்கிடப்படும். 5-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெறும் அணிக்கு மொத்தம் 3 வெற்றி புள்ளிகள் கிடைக்கும். தோல்வி அடையும் அணிக்கு புள்ளி எதுவும் கிடைக்காது. 3-2 மற்றும் 4-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெறும் அணிக்கு 2 வெற்றி புள்ளிகள் மட்டுமே கிட்டும். அரை இறுதியில் இருந்து முதலில் 25 புள்ளியை எட்டும் அணி செட்டை வெல்லும். போட்டியை விறுவிறுப்பாக்க சூப்பர் செர்வ் மற்றும் சூப்பர் பாயிண்ட் முறையும் புகுத்தப்படுகிறது.

கொச்சியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ்-யு மும்பா வாலி (மும்பை) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.299 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டி குறித்து கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணியின் கேப்டன் உக்கரபாண்டியன் கருத்து தெரிவிக்கையில், ‘கடைசியாக நாங்கள் காத்து இருந்த தருணம் வந்து விட்டது. உலக அளவில் சிறந்து விளங்கும் அணிகளுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்பட இந்த போட்டி அடித்தளமாக அமையும். இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

யு மும்பா வாலி அணியின் கேப்டன் திபேஷ் சின்ஹா கூறுகையில் ‘வளர்ந்து வரும் வீரர்கள் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடி தங்கள் தரத்தை உயர்த்த இந்த போட்டி ஒரு வாய்ப்பாக அமையும். உள்ளூர் அணிக்கு எதிரான இந்த லீக்கை தொடங்குவது சவாலானதாக இருக்கும். ஆனால் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்’ என்றார்.