ரூபே புரோ பிரிமியர் லீக் தொடரில் கொச்சி புளூஸ் பைக்கர்சுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி அருமையானதொரு வெற்றி வாய்ப்பை 2-3 என்ற செட் கணக்கில் இழந்து விட்டிருந்தது. இதையடுத்து பிளே ஆஃப் இல் மீதமுள்ள இரு இடங்களை பெறும் போட்டியில் உள்ள 3 அணிகளில் ஒன்றாக சென்னை மாறியுள்ளது. அடுத்து வரும் 16ம் தேதி யு மும்பா அணியுடனும் 17ம் தேதி அகமதாபாத் டிஃபெண்டர்ஸ் அணியுடனும் சென்னை ஸ்பார்டன்ஸ் மோத உள்ளது. மேலும் இனி வரும் போட்டிகளும் சென்னையில் நடக்க உள்ளன. கொச்சியுடனான போட்டியில் முதல் இரு செட்டுகளை அபாரமான முறையில் சென்னை ஸ்பார்டன்ஸ் வெற்றி கொண்டது. ஆனால் அடுத்த 3 செட்டுகளையும் இழந்து ஆட்டத்தையும் தோற்றது.

எதிரணியினர் சிறப்பாக விளையாட தொடங்கியதுதான் ஆட்டத்தின் திருப்பமாக அமைந்தது என்கிறார் சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் ரூடி வெராஃப். அணியில் கூட்டாக எல்லாரும் அதிகளவில் தவறுகள் செய்தது தோல்விக்கு காரணமாகிவிட்டது என மேலும் கூறுகிறார் வெராஃப். அகின் ஜிஎஸ் காயமடைந்ததை சுட்டிக் காட்டிய வெராஃப், கடைசி செட்டில் அகின் நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தும் அதை பயன்படுத்த கொள்ள தவறிவிட்டதாக குறிப்பிட்டார். காலிகட் ஹீரோஸ், கொச்சி புளூஸ் பைக்கர்ஸ் அணிகள் பிளே ஆஃப்புக்குள் நுழைந்துவிட்டன. சென்னையை பொறுத்தவரை ஐதராபாத் அணியிடம் மட்டும் வெற்றிபெற்றுள்ளது.

அடுத்து வரும் போட்டிகள் உள்ளூரில் நடப்பதால் ரசிகர்களின் ஆதரவும் கிடைக்கும் என்கிறார் சென்னை ஸ்பார்டன்ஸ் கேப்டன் ஷெல்டன் மோசஸ். அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடுவோம் என்றும் மோசஸ் நம்பிக்கை தெரிவித்தார். தங்கள் அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என்கிறார் சென்னை ஸ்பார்டன்ஸ் தலைமை பயிற்சியாளர் எம்.எச்.குமரா. அகினுக்கு ஏற்பட்ட காயம் அவரது ஆட்டத்தை பாதித்ததாக கூறும் குமரா முதல் 2 செட்டில் கிடைத்த வெற்றி வீரர்களின் மனதில் இருந்த உத்வேகம் குறைந்து விட்டதாகவும் கூறுகிறார். சென்னை ஸ்பார்டன்ஸ் அணி கால்ஸ் குழுமத்தை சேர்ந்தது. இக்குழுமம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் வாலிபால் விளையாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறது.