வீரர்கள் ஒருங்கிணைந்து ஆடியதும் அணி நிர்வாகத்தின் சிறப்பான ஒத்துழைப்புமே சென்னை ஸ்பார்டன்ஸ் பட்டம் வெல்ல காரணம் என அந்த அணி பயிற்சியாளர் எம்.எச்.குமரா தெரிவித்தார். முதல் புரோ வாலிபால். லீக்கில் இறுதி ஆட்டத்தில் காலிக்கட் ஹீரோஸை வீழ்த்தி சென்னை ஸ்பார்டன்ஸ் மகுடம் சூடியது. இத்தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிப்போட்டிக்கு வந்த காலிக்கட்டை சென்னை வீழ்த்தி அசத்தியது. இதன் பின் சென்னை அணி பயிற்சியாளர் எம்.எச்.குமரா செய்தியாளர்களிடம் பேசினார். காலிக்கட் அணியை போல அல்லாமல் எங்கள் அணியின் ஆட்டம் ஏற்றஇறக்கங்களுடன் இருந்தது. இது எங்களை அமைதிப்படுத்தியதுடன் ஒருங்கிணைந்த அணியாக ஆடவும் தூண்டியது என்கிறார் குமரா.

ஸ்பார்டன்ஸ் அணி லீக்கில் 2 வெற்றி மட்டுமே பெற்றிருந்தாலும் நெருக்கடியான தருணங்களில் ஆச்சரியம் தரும் வகையில் ஆடி ஆபத்தான அணியாக சென்னை மாறியிருந்தது. கொச்சி உடனான அரையிறுதியில் சென்னை அணி 1-2 என பின் தங்கியிருந்த நிலையில் பின்னர் வீறு கொண்டு எழுந்து 3-2 என ஆட்டத்தை வென்றது. இந்த வெற்றி உற்சாகத்தை தருவதாக கூறுகிறார் நட்சத்திர வீரர் ரூடி வெராஃப். இந்த வெற்றி எளிதானதாக இருக்கவில்லை. கொச்சியுடனான அரையிறுதி அனுபவம் இறுதிப் போட்டியில் வெகுவாக உதவியது என்கிறார் வெராஃப். இறுதிப்போட்டியில் 3வது செட்டை வென்றாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இல்லாவிடில் வெற்றிக்கு மிக கடுமையாக போராட வேண்டும் என உணர்ந்திருந்தோம் என்கிறார் வெராஃப். காலிக்கட் மிகச்சிறந்த அணி. அதில் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சர்வ் -ஐ மட்டுமே அதிகம் நம்பியிருந்தனர். அதை நாங்கள் சமாளித்து விட்டோம் என்கிறார் வெராஃப்.
முன்னதாக லீக் சுற்றில் காலிக்கட்டிடம் 1-4 என்ற கணக்கில் சென்னை தோற்றிருந்தது. இதற்கு பதிலடியாகவும் சென்னையின் வெற்றி பார்க்கப்படுகிறது.

இறுதிப்போட்டிக்கு நாங்கள் வரமாட்டோம் என கூறினார்கள். இந்நிலையில் நன்றாக ஆடி பட்டம் வென்றது பெரு மகிழ்ச்சி தருவதாக கூறுகிறார் சென்னை வீரர் அகின் ஜி.எஸ். இது எனது சொந்த ஊரும் கூட…அதற்காக பட்டம் வென்று தந்தது கூடுதல் மகிழ்ச்சி என்கிறார்.

கேப்டன் ஷெல்டன் மோசஸ்.
வீரர்கள், அணி நிர்வாகத்துக்கு இடையே சிறந்த ஒற்றுமை வெற்றிக்கு காரணமானது என்கிறார் மோசஸ். இந்த வெற்றி மூலம் ஆசிய ஆண்கள் கிளப் வாலிபால் சாம்பியன்ஷிப்பிற்கு சென்னை ஸ்பார்டன்ஸ் தகுதி பெற்றுள்ளது. சென்னை ஸ்பார்டன்ஸை நிர்வகிக்கும் கால்ஸ் குழுமம் தமிழகத்தில் வாலிபால் வளர்ச்சிக்காக 30 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறது