புரோ வாலிபால் லீக் அரையிறுதியில் கொச்சியை வீழ்த்தி சென்னை ஸ்பார்டன்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ரூபே புரோ வாலிபால் லீக் தொடரில் 2வது அரையிறுதி போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணியை இன்று எதிர்கொண்டது. சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் இப்போட்டி நடைபெற்றது. சென்னை ஸ்பார்டன்ஸ் அணி லீக் சுற்றில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்திருந்தது. கொச்சி அணி 2வது இடம் பெற்றிருந்தது. இவ்விரு அணிகளும் லீக்சுற்றில் மோதியபோது கொச்சி வென்றிருந்தது. இந்நிலையில் 2வது அரையிறுதி தொடங்கியது அரையிறுதி என்பதால் ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலிருந்தே அனல் பறந்தது. கொச்சி அணிக்கு முதல் புள்ளி சென்ற நிலையில் சென்னை வீரர்களும் சளைக்காமல் பதிலடி தந்தனர். குறிப்பாக ரஸ்லான்ஸ் சொரோக்கின்ஸ் ஆட்டம் பிரமாதமாக அமைந்தது. அதிரடி ஸ்பைக்குகளால் இவர் புள்ளிகளை மளமளவென பெற்றுத்தந்தார். வெராஃப் சூப்பர் பாயின்ட் எடுத்து சென்னையை சாதகமான நிலைக்கு கொண்டுவந்தார். இறுதியில் சொரோக்கின்ஸ் அட்டகாசமான 2 ஸ்பைக்குகள் மூலம் சென்னைக்கு முதல் செட்டை பெற்றுத்தந்தார்.
இந்நிலையில் 2வது செட்டில் சிலிர்த்தெழுந்த கொச்சி வீரர்கள் மின்னல் வேகத்தில் புள்ளிகளை அள்ளினர். சென்னை ஸ்பார்டன்ஸ் வீரர்களின் சில தவறுகளும் கொச்சிக்கு சாதகமாக அமைந்தது. 15-9 என 2வது செட்டை கொச்சி கைப்பற்றியது. இதே வேகத்தில் ஆடிய கொச்சி அணி 3வது செட்டையும் 15-10 என்ற கணக்கில் வென்று 2-1 என சாதகமான நிலைக்கு சென்றது. இந் நிலையில் மிக முக்கியமான 4வது செட்டில் சென்னை வீரர்கள் மிகுந்த கவனத்துடன் ஆடினர். அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து ஆடியதால் கை மேல் பலனாக கிடுகிடுவென புள் ளிகள் சேர்ந்தன. வெராஃப் இந்த செட்டிலும் சூப்பர் பாயின்ட்டை கில்லி போல் சொல்லி அடித்தார். முடிவில் சென்னை 15-8 என அபாரமாக 4வது செட்டை வென்று 2-2 என சம நிலை ஏற்படுத்தியது.
இந்நிலையில் போட்டியின் முடிவை தீர்மானிக்க கூடிய கடைசி செட் தொடங்கியது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இந்த செட்டிலும் சென்னை முன்னிலை பெற்றது. இருந்தாலும் கொச்சி வீரர்களும் விடாப்பிடியாக துரத்திவந்தனர். 12-11 என கொச்சி முன்னிலை பெற்ற நிலையில் நவீன் ராஜா ஒரு சூப்பர் பாயின்ட் உட்பட 3 புள்ளி எடுத்து சென்னையின் கையை ஓங்க வைத்தார். அடுத்து அகின் ஒரு புள்ளியை எடுக்க இறுதியாக சொரோக்கின்ஸ் வெற்றிக்கான புள்ளியை உறுதி செய்து சென்னையை இறுதிப்போட்டிக்கு அழைத்துசென்றார். இறுதி ஸ்கோர் 14-16, 15-9, 15-10, 8-15, 13-15. இன்றைய போட்டியில் சொரோக்கின்ஸ் 17, நவீன் 13, வெராஃப் 11, அகின் 9 புள்ளிகள் எடுத்தனர். வெள்ளிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் காலிகட் ஹீரோஸ் அணியை சென்னை ஸ்பார்டன்ஸ் சந்திக்க உள்ளது.