௹பே புரோ வாலிபால் லீக் தொடரில் அகமதாபாத்தை வீழ்த்திய சென்னை ஸ்பார்டன்ஸ் அரையிறுதி வாய்ப்பை பெற்றது.
ரூபே புரோ வாலிபால் லீக் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணியும் அகமதாபாத் டிஃபெண்டர்ஸ் அணியும் மோதின. சென்னை ஸ்பார்டன்ஸ் அணி இதற்கு முன் 4 போட்டிகளில் ஆடி ஒரு வெற்றியும் 3 தோல்வியும் பெற்றிருந்தது. அகமதாபாத் அணி 3 போட்டிகளில் ஆடி அனைத்திலும் தோற்றிருந்தது. ஏற்கனவே காலிகட் ஹீரோஸ் அணி 5 வெற்றிபெற்று பிளே ஆஃபில் நுழைந்திருந்தது. கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் அணிகளும் பிளே ஆஃபில் நுழைந்திருந்தன. இந்நிலையில் பிளே ஆஃபில் நுழைய சென்னை, மும்பை, அகமதாபாத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்த சூழலில் சென்னை ஜவகர்லால் நேரு மைதானத்தில் போட்டி தொடங்கியது.

முதல் புள்ளியை அகமதாபாத் பெற்றாலும் சென்னையின் சொரோக்கின்ஸ், நவீன் ராஜா, வெராஃப் கூட்டணி அதிரடியாக ஸ்பைக், பிளாக் என மாறி மாறி புள்ளிகளை குவித்தது. சூப்பர் சர்வில் வெராஃப் 2 புள்ளிகளை பெற்றுத் தந்தார். அடுத்து நவீன் ராஜா அட்டகாசமாக 2 சூப்பர் பாயின்ட் எடுத்தார். இறுதியில் நவீன் ராஜா ஒரு புள்ளி எடுத்து முதல் செட்டை சென்னை அணி வெல்ல உதவினார். ஸ்பார்டன்களின் ஸ்பீடு ஆட்டத்திற்கு முன் தாக்குப்பிடிக்க முடியாத அகமதாபாத் முதல் செட்டில் 6 புள்ளிகள் மட்டுமே எடுத்தது.ஆனால் அடுத்த செட்டில் அகமதாபாத் வீரர்கள் சிறப்பாக ஆடி ஆட்டத்தில் விறுவிறுப்பை கூட்டினர். சென்னை தரப்பில் சொரோக்கின்ஸ் நன்றாக ஆடினாலும் இது போதிய பலன் தரவில்லை. இறுதியில் 15-13 என்ற புள்ளிக்கணக்கில் அகமதாபாத் இந்த செட்டை வசப்படுத்தியது. அடுத்த செட்டிலும் இரு அணிகளும் விடாப்பிடியாக ஆடின. 9-11 என சென்னை பின் தங்கியிருந்த நிலையில் வெராஃப் ஒரு சூப்பர் பாயிண்ட் எடுத்து சமநிலை ஏற்படுத்தினார். முடிவில் 15-13 என்ற புள்ளிக்கணக்கில் இந்த செட்டை சென்னை வென்றது.

பிளே ஆஃப்புக்கு முன்னேறும் துடிப்புடன் இருந்த சென்னை வீரர்கள் 4வது செட்டில் அடுத்தடுத்து புள்ளிகளை எடுத்து முன்னிலை பெற்றனர். குறிப்பாக ரூடி வெராஃபின் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஒரு சூப்பர் பாயின்ட் உட்பட 7 புள்ளிகளை அவர் ஈட்டித்தந்தார். முடிவில் 15-11 என சென்னை இந்த செட்டை வென்று ஆட்டத்தையும் தன் வசப்படுத்துயது. இதன் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைத்துக்கொண்டது. கடைசி செட்டில் அகமதாபாத் வேகம் காட்டினாலும் அது செல்லுபடியாகவில்லை. இந்த செட்டை சென்னை 15-12 என்ற கணக்கில் வென்றது. இத்தொடரில் 2வது வெற்றி பெற்ற சென்னை அரையிறுதிக்குள் நுழைந்தது. இறுதி ஸ்கோர் 15-6, 13-15, 15-13, 15-11, 15-12. இப்போட்டியில் சென்னை தரப்பில் வெராஃப் பிரமாதமாக ஆடி 20 புள்ளிகளை எடுத்தார். நவீன் ராஜா, சொரோக்கின்ஸ் தலா 17 புள்ளிகளை எடுத்தனர்.