ரூபே புரோ வாலிபால் லீக் தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவோம் என சென்னை ஸ்பார்டன்ஸ் அணி நம்பிக்கை தெரிவித்துள்ளது. புரோ வாலிபால் தொடரில் லீக் பிரிவில் சென்னைக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளது. இதில் ஒன்றில் வென்றால் பிளே ஆஃபில் நுழைய முடியும் என்ற நிலை உள்ளது. இதை சாதிக்க முடியும் என கருதுகிறது ஷெல்டன் மோசஸ் தலைமையிலான அணி. புரோ வாலிபால் லீக்கில் முதல் கட்ட போட்டி கொச்சியில் நடந்த நிலையில் அடுத்த கட்ட போட்டிகள் சென்னையில் நடக்கிறது. சனிக்கிழமை முதல் நேரு ஸ்டேடியத்தில் போட்டி நடக்கிறது. உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு சென்னைக்கு கிடைப்பது அந்த அணிக்கு பெரிய பலம். சென்னை அணி 3 போட்டியில் ஆடி ஒரு வெற்றி 2 தோல்வி பெற்றுள்ளது. 2 புள்ளி எடுத்துள்ளது. அடுத்து யு மும்பாவுடன் 16ம் தேதியும் அகமதாபாத்துடன் 17ம் தேதியும் மோதுகிறது. இந்த 2 அணிகளுமே இதுவரை ஜெயிக்கவில்லை. காலிகட் ஹீரோஸ் 11, கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் 8, பிளாக் ஹாக்ஸ் ஐதராபாத் 4 புள்ளியுடன் ஏற்கனவே நாக்அவுட்டில் நுழைந்துவிட்டன.

கொச்சியுடனான போட்டியில் காயமடைந்த அகின் ஜி.எஸ் தேறி வருகிறார். இவர் நாளை விளையாட உள்ளார். கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி பற்றி பேசிய பயிற்சியாளர் குமரா, இது நடப்பதுதான்…அது ஒரு பாடம் என்கிறார். கால்ஸ் குழுமத்தை சேர்ந்த்து சென்னை ஸ்பார்டன்ஸ். இக்குழுமம் கடந்த 30 ஆண்டிகளாக தமிழகத்தில் வாலிபால் விளையாட்டை வளர்க்க பாடுபட்டுவருகிறது.