புரோ வாலிபால் லீக்கில் ஆடும் சென்னை ஸ்பார்டன்ஸ் அணிக்கு சர்வதேச வீரர் ரூடி வெராஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புரோ வாலிபால் லீக் முதல் முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது. சென்னை மற்றும் கொச்சியில் பிப்ரவரியில் நடக்க உள்ள இத்தொடருக்கான வீரர்கள் ஏலம் மற்றும் ஒதுக்கீடு டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்திய வாலிபால் விளையாட்டின் புதிய அத்தியாயமாக கருதப்படும் இத்தொடரில், கனடா வீரரான வெராஃப்-ஐ சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் உரிமையாளரான கால்ஸ் குழுமம் தேர்வு செய்தது. 204 சென்டி மீட்டர் உயரத்தில் நெடிதுயர்ந்த பிளாக்கரான வெராஃப் சர்வதேச வீரர்கள் பட்டியலில் இருந்து மூன்றாவதாக தேர்வு செய்யப்பட்டார்.

“ஸ்விஸ் லீக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச தொடர்களில் ஆடி அனுபவம் பெற்றுள்ள வெராஃப் சென்னை ஸ்பார்டன்ஸ் அணிக்கு மாபெரும் சொத்து” என வர்ணித்தார் அந்த அணியின் வணிக தொடர்புகள் மற்றும் பிராண்டிங் பிரிவு தலைமை அதிகாரி டாக்டர் உப்பிலியப்பன் கோபாலன். வெராஃப் சென்னை அணியில் இடம்பெற்றது த்ரில் ஆன விஷயம் என மகிழ்கிறார் டாக்டர் உப்பிலியப்பன் கோபாலன். 29 வயதான வெராஃப் -இன் ஸ்பைக் உயரம் 349 சென்டி மீட்டர். பிளாக் உயரம் 317 சென்டி மீட்டர். கடந்த 2016ல் பிரேசிலின் ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில் ஆடிய கனடா வாலிபால் அணியில் வெராஃப் இடம் பெற்றிருந்தார். மேலும் இவர் இடம் பெற்றிருந்த கனடா அணி வட அமெரிக்க வாலிபால் சாம்பியன்ஷிப்பிலும் தங்கப்பதக்கம் வென்று மகுடம் சூடியிருந்தது.

நட்சத்திர வீரர் ஜி.எஸ்.அகின்-ஐயும் 10 லட்சம் ரூபாய் செலவில் தங்கள் பக்கம் இணைத்துள்ளது சென்னை ஸ்பார்டன்ஸ். கேரளாவை சேர்ந்த அகினின் உயரம் 204 சென்டி மீட்டர். 28 வயதான பிளாக்கர் அகினின் அடிப்படை விலை 8 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 95 கிலோ எடையுள்ள அகின் உடைய ஸ்பைக் உயரம் 360 சென்டி மீட்டர். பிளாக் உயரம் 340 சென்டி மீட்டர்.