ரூபே புரோ வாலிபால் லீக் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் பிளாக்ஹாக்ஸ் ஐதராபாத் அணியை சென்னை ஸ்பார்டன்ஸ் அணி சந்திக்க உள்ளது. இந்நிலையில் கருத்து தெரிவித்த சென்னை அணி மேலாளர் நடராஜன் ஜெயக்குமார், முதல் போட்டியில் தோற்றாலும் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் வலுவான அணியாக மீண்டு வருவோம் என தெரிவித்தார். மேலும் முதல் போட்டியில் அடைந்த தோல்வி தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள கிடைத்த ஒரு வாய்ப்பு என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கடந்த ஞாயிறன்று நடந்த போட்டியில் காலிகட் ஹீரோஸ் அணியிடம் சென்னை ஸ்பார்டன்ஸ் போராடி தோற்றது. “இப்போட்டியில் முதல் 2செட்களை இழந்தாலும் 3வது செட்டில் தங்கள் வீரர்கள் சிறப்பாக ஆடினர்” என ஜெயக்குமார் குறிப்பிட்டார்.”கடைசி 2 செட்களிலும் முனைப்பு காட்டினாலும் அதை வெற்றியாகமாற்றுவதில் தவறிவிட்டோம்” என்றும் ஜெயக்குமார் கூறினார். “எனினும் அடுத்து வரும் போட்டிகளில் வாய்ப்புகளை நழுவ விடாமல் ஆடி வெற்றி பெறுவோம்” என்றும் சென்னை அணி மேலாளர் கூறினார். ரூபே புரோ வாலிபால் லீக் தொடரில் விறுவிறுப்பை ஏற்றும் வகையில் சூப்பர் பாயின்ட், சூப்பர் சர்வ் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சர்விங் அணி போடும் ஒவ்வொரு ஏஸும் சூப்பர் சர்வ் ஆக கருதப்பட்டு 2 புள்ளிகள் வழங்கப்படும். ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு செட்டிலும் தலா ஒரு சூப்பர் பாயின்ட் முயற்சியை மேற்கொள்ள முடியும்.
இதில் வெல்லும் அணிக்கு 2 புள்ளிகள் கிடைக்கும். தோற்கும் பட்சத்தில் எதிரணிக்கு 2 புள்ளி செல்லும். அதே சமயம் ஒவ்வொரு சுட்டிலும் 11 புள்ளி எடுக்கும் முன்பே சூப்பர் பாயின்ட் எடுக்க முடியும். இப்புள்ளியை மேற்கொண்டு எடுத்துச்செல்ல முடியாது. “இந்த புதிய முறை போட்டிகளை விறுவிறுப்பாக மாற்றுவதாகவும் ஆனால் இந்த முறைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள சில காலம் ஆகும்” என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார். 6 அணிகள் விளையாடும் லீக் சுற்றில் ஒவ்வொரு செட்டும் 15 புள்ளிகள் கொண்டதாக இருக்கும். அதாவது முதலில் 15 புள்ளி எடுப்பவர் அந்த செட்டை வெல்வார். ஒரு போட்டிக்கு 5 செட் இருக்கும். பிளே ஆஃபிலிருந்து ஒரு செட்டில் வெல்ல 25 புள்ளிகள் எடுக்கவேண்டியிருக்கும். வெற்றிபெறும் அணிக்கு 2 புள்ளிகள் தரப்படும். ஒரு அணி 5 செட்டிலும் வெற்றிபெற்றால் 3 புள்ளிகள் வழங்கப்படும். ஸ்பார்டன்ஸ் அணி கால்ஸ் குழுமத்தை சேர்ந்தது. தமிழகத்தில் வாலிபாலை வளர்க்க 30 ஆண்டுகளாக இக்குழுமம் பாடுபடுகிறது.