கொச்சி அணிக்கு எதிரான போட்டியில் முதல் 2 செட்டுகளையும் வென்றபோதும் கடைசியில் சென்னை அணி நூலிழையில் வெற்றியை கை நழுவவிட்டது. ரூபே புரோ வாலிபால் லீக் தொடரில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி கொச்சி ஸ்பைக்கர்ஸ் அணியை இன்று சந்தித்தது. கேரள மாநிலம் கொச்சி ராஜிவ் காந்தி உள்ளரங்க மைதானத்தில் இப்போட்டி நடந்தது. சென்னை அணி தனது முதல் போட்டியில் காலிகட் ஹீரோஸ் அணியிடம் போராடி தோற்றிருந்தது. அடுத்து பிளாக்ஹாக்ஸ் ஐதராபாத் அணியை 4-1 என்ற ஆட்டக் கணக்கில் துவம்சம் செய்து சென்னை ஸ்பார்டன்ஸ் மிரட்டல் வெற்றியை பெற்றது.
கொச்சி அணியை பொறுத்தவரை ஆடிய 4 போட்டிகளில் 3ல் வென்றிருந்தது. கடைசியாக காலிகட் ஹீரோசிடம் 0-5 என்ற கணக்கில் வாஷ் அவுட் தோல்வியை கொச்சி சந்தித்திருந்தது. இந்நிலையில் தொடரின் 10 வது போட்டி தொடங்கியது.

அகின் ஜி.எஸ். ஒரு அருமையான ஸ்பைக் மூலம் முதல் புள்ளியை பெற்று சென்னை அணியின் கணக்கை தொடக்கி வைத்தார். அகின், வெராஃப் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தில் சென்னை புள்ளிகளை குவித்தாலும் கொச்சி வீரர்களும் சளைக்காமல் பதிலடி தந்தனர். எனினும் இறுதிக்கட்டத்தில் நன்றாக ஆடி 15-12 என்ற புள்ளிக்கணக்கில் முதல் செட்டை சென்னை கைப்பற்றியது. 2வது செட்டையும் ஸ்பார்டன்ஸ் அசத்தலாக தொடங்கியது. வெராஃப் முதல் புள்ளியை ஈட்டிக்கொடுத்தார். இந்த முன்னிலையை சென்னை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டே வந்தது. முடிவில் அபாரமான ஒரு ஸ்பைக் மூலம் 2வது செட்டை பெற்றுக்கொடுத்தார் வெராஃப். இந்த செட்டை 15-10 என எளிதில் சென்னை வென்றது. முக்கியமான 3வது செட்டில் கொச்சி வீரர்கள் கடும் சவால் தந்து புள்ளிகளை குவித்து முன்னிலை பெற்றனர். இதற்கிடையில் சென்னை வீரர்களின் தவறுகளும் கொச்சியின் முன்னேற்றத்துக்கு பாதை அமைத்தன. முடிவில் 15-11 என்ற புள்ளிக்கணக்கில் கொச்சி வெற்றி பெற்றது. இதில் சென்னை அணி தவறுகள் மூலம் 6 புள்ளிகளை எதிரணிக்கு தந்தது.

4வது செட்டில் அனல் பறந்த ஆட்டத்தில் கொச்சி அணி உள்ளூர் ரசிகர்களின் உற்சாக ஊக்குவிப்புடன் இந்த செட்டை தனதாக்கியது. இரு அணிகளும் தலா 2 செட்டை வென்றதால் கடைசி செட்டை வெல்பவர்களுக்கே ஆட்டமும் வசமாகும் என்ற த்ரில்லான நிலை ஏற்பட்டது.
எனினும் இந்த செட்டில் கொச்சி வீரர்களே முன்னிலையில் இருந்து வந்தனர். முடிவில் 15-10 என வெற்றிபெற்று ஆட்டத்தையும் கொச்சி வசப்படுத்தியது. இறுதி ஸ்கோர் 12-15, 10-15, 15-11, 15-13,15-10. சென்னை தரப்பில் வெராஃப் 20, அகின் 11, நவீன் ராஜா 10 புள்ளிகள் எடுத்தனர்.