பிளாக்ஹாக்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக கிடைத்த வெற்றி தங்கள் அணி வீரர்களின் ஒருங்கிணைந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி என சென்னை ஸ்பார்டன்ஸ் தலைமை பயிற்சியாளர் எம்.எச்.குமரா தெரிவித்தார்.ஐதராபாத்திற்கு எதிரான வெற்றிக்கு பிறகு கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய குமரா, அணியின் வெற்றியில் செட்டர் வி்.ஹரிஹரன் முக்கிய பங்களித்தார் என தெரிவித்தார். இந்த ஆட்டத்தில் அனுபவ வீரர் கபில் தேவுக்கு மாற்றாக ஹரிஹரன் களமிறங்கினார். அணியின் கேப்டன் மோசஸும் ஹரிஹரனின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டினார். “ஒரு ஆட்டத்தில் எல்லா வீரர்களும் ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது என தெரிவித்த மோசஸ், சிறப்பாக ஆடிய ஹரிக்கு நன்றி எனத் தெரிவித்தார்.
மூத்த வீரர் கபில் அனைவருக்கும் சிறப்பான ஆலோசனைகளை வழங்கினார் என்றும் குறிப்பாக இளம் வீரர் ஹரிஹரனை அவர் சிறப்பாக வழிநடத்தினார் என்னும் பயிற்சியாளர் குமரா தெரிவித்தார். கபிலின் அனுபவம் மிகுந்த பயன் தந்தது என்றும் குமரா கூறினார். ஐதராபாத்திற்கு எதிராக சிறப்பாக ஆடினோம் எனக் குறிப்பிட்ட கேப்டன் மோசஸ், முதல் செட்டில் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் பின்தங்கினாலும் வெற்றி பெற வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் இருந்தோம் என்றும் குறிப்பிட்டார்.
நவீன்ராஜா ஜேகப் 16, ரஸ்லான்ஸ் சொரோக்கின்ஸ் 13, வெராஃப் 10, அகின் 8 புள்ளிகள் எடுத்து ஸ்பார்டன்ஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.இது ஒரு அணி முயற்சி்..வீரர்கள் மிகச்சிறப்பாக ஆடினர்…ரூடி, ரஸ்லான்ஸ், நவீன் ஆகியோர் மிக நன்றாக ஆடி பெரிய வெற்றிக்கு உதவினர் என்கிறார் குமரா. கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணியுடன் வரும் 11ம் தேதி சென்னை ஸ்பார்டன்ஸ் மோத உள்ளது.ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் முதல் 5 செட்டில் வென்றாலும் கடைசி செட்டை இழந்ததால் ஒயிட்வாஷ் மூலம் 3 புள்ளிகளை பெறும் வாய்ப்பை சென்னை நழுவ விட்டது. இது குறித்து கவலை தேவையில்லை என்கிறார் ரூடி வெராஃப். எல்லாருமே 15 புள்ளிகள் கொண்ட செட் உள்ள ஆட்டத்தில் முதல்முறையாக விளையாடுகிறோம். இது லாட்டரி போன்றது. சில தவறுகள் செய்ததால் அந்த செட்டை வெல்ல முடியாமல் போனது. எனினும் ஆட்டத்தை வென்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்கிறார் வெராஃப். கால்ஸ் குழுமத்தை சேர்ந்த சென்னை ஸ்பார்டன்ஸ் அணி தமிழகத்தில் வாலிபால் விளையாட்டை வளர்க்க கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பாடுபட்டு வருகிறது.