ரூபே புரோ வாலிபால் லீக் தொடரில் பிளாக்ஹாக்ஸ் ஐதராபாத் அணியை 4-1 என்ற செட் கணக்கில் சென்னை ஸ்பார்டன்ஸ் வீழ்த்தியது. இதில் சென்னை அணி வீரர் ஹரிஹரனின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இந்நிலையில் திங்கள் கிழமை நடைபெறும் போட்டியில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணியை சென்னை ஸ்பார்டன்ஸ் சந்திக்க உள்ளது. இந்த ஆட்டத்தில் சென்னை ஸ்பார்டன்ஸ் தனது ஆட்டத்திறனை மேலும் உயர்த்திக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய போட்டியில் சென்னை அணியில் அனுபவ வீரர் கே.ஜே.கபில் தேவுக்கு பதில் தமிழக வீரர் ஹரிஹரன் முதல் செட்டில் களமிறக்கப்பட்டார். காலிகட்டிடம் முதல் போட்டியில் தோற்றிருந்தாலும் ஐதராபாத்திடம் அசத்தலாக ஆடி சென்னை வெற்றிபெற்றது.

“சாதனையாளரான கபில் அண்ணாவிற்கு பதில் களமிறங்கியது எனக்கு சவாலான பணியாக இருந்தது” என்கிறார் இளம் வீரரான ஹரிஹரன். நாட்டின் மூத்த வாலிபால் வீரர்களில் ஒருவரான கபில்தேவ் உயரிய விளையாட்டு விருதான அர்ஜுனா விருதையும் வென்றுள்ளார். “கபில்தேவ், நவீன் ராஜா ஜேகப் போன்ற சக வீரர்களின் ஆட்டத்தை பார்த்து கிடைத்த ஊக்கம் என்னை நன்றாக ஆடத்தூண்டியது” என்கிறார் ஹரிஹரன். “கபில் தேவிடமிருந்து நான் நிறைய கற்றுள்ளேன். களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆட்ட நுணுக்கங்கள் பற்றி எனக்கு அவர் நிறைய ஆலோசனை தந்துள்ளார்” என்கிறார் ஹரிஹரன்.

தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த ஹரிஹரன் கடந்த 3 ஆண்டுகளாக இந்திய சீனியர் வாலிபால் அணிக்கு ஆடி வருகிறார். பிளாக்ஹாக்ஸ் ஐதராபாத்-க்கு எதிரான போட்டியில் ஸ்பார்டன்ஸ் தரப்பில் ஜேகப்-16, ரஸ்லான் சொரோக்கின்ஸ் -13, ரூடி வெராஃப் -10, அகின் ஜிஎஸ்-8 புள்ளிகள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். சென்னை ஸபார்டன் அணி கால்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகும். தமிழகத்தில் வாலிபால் விளையாட்டை வளர்ப்பதில் இந்நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பாடுபட்டு வருகிறது.