புரோ வாலிபால் லீக் தொடரில் பிளாக்ஹாக்ஸ் ஐதராபாத் அணியை 4-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சென்னை ஸ்பார்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ரூபே புரோ வாலிபால் லீக் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி, பிளாக்ஹாக்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதியது. இந்த போட்டி கொச்சி ராஜிவ்காந்தி உள்ளரங்க மைதானத்தில் நடைபெற்றது. சென்னை அணி தனது முதல் போட்டியில் காலிகட் ஹீரோஸ் அணியிடம் போராடி தோற்றிருந்தது. அதே சமயம் பிளாக்ஹாக்ஸ் ஐதராபாத் அணி தன் முதல் ஆட்டத்தில் அகமதாபாத் டிபென்டர்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் இன்றைய போட்டி தொடங்கியது. எடுத்த எடுத்த எடுப்பிலேயே ஐதராபாத் அணி புள்ளிகளை குவித்து மளமளவென முன்னேறியது. 5 – 0 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலையில் இருந்த நிலையில் சென்னை அணி வீறுகொண்டு எழுந்து பதிலடி தந்தது. ஒவ்வொரு அடியையும் இடி போல இறக்கி ஸ்பார்டன்ஸ் வீரர்கள் மிரட்டினர். இறுதியில் 15-12 என்ற கணக்கில் முதல் செட்டையும் சென்னை தனதாக்கியது. இதில் வெராஃப் 3, கேப்டன் மோசஸ் 2புள்ளிகளை எடுத்தனர்.
அடுத்த செட்டையும் சென்னை சிறப்பாக தொடக்கியது. நவீன் ராஜா அடுத்தடுத்து 2 புள்ளிகளை அள்ளி நல்ல தொடக்கம் தந்தார். எனினும் விடாமல் துரத்தி வந்த ஐதராபாத் வீரர்கள் சூப்பர் பாயின்டுடன் முன்னிலை பெற்றனர். இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது. சளைக்காமல் ஆடிய சென்னை வீரர்கள் இறுதியில் 15-12 என்ற புள்ளிகளை கணக்கில் வென்று 2-0 என்ற நம்பிக்கை தரும் முன்னிலையை பெற்றனர். இந்த செட்டில் நேர்த்தியாக ஆடிய ஸ்பார்டன்ஸ் எரர் முறையில் ஒரே ஒரு புள்ளியை மட்டும் எதிரணிக்கு விட்டுத்தந்தனர். சென்னை அணியில் வெராஃப் 3 புள்ளிகளை எடுத்தார். முதல் 2 செட்டுகளையும் இழந்த ஐதராபாத் வீரர்கள் தங்கள் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர். சென்னை வீரர்களும் சளைக்காமல் ஆடியதால் மாறிமாறி புள்ளிகள் வந்தன. 9-10 என ஐதராபாத் முன்னிலையில் இருந்த நிலையில் நவீன் ராஜாவின் சூப்பர் சர்வ், சூப்பர் பாயின்ட் என்ற இரட்டை அசத்தல்களில் 4 புள்ளிகளை ஈட்டி செட்டையும் 15-11 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை வென்றது. 3 செட்டுகளை வென்றது மூலம் வெற்றியையும் உறுதிப்படுத்தியது.
வெற்றி பெற்ற உற்சாகத்திலிருந்த ஸ்பார்டன்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் புள்ளிகளை குவித்தனர். முடிவில் 15-10 என்ற புள்ளிக்கணக்கில் இந்த செட்டையும் வென்று 4-0 என்ற கணக்கில் அமர்க்களமான முன்னிலையை சென்னை பெற்றது. 4 செட்டுகளை வென்ற சென்னை அணி அடுத்து வாஷ்அவுட் வெற்றியை இலக்கு வைத்து 5வது செட்டை தொடக்கியது. கடைசி செட்டிலும் பிரமாதமாக ஆடிய சென்னை எதிரணியை கதிகலங்க செய்தது. அனுபவ வீரர் சொரோகின்ஸ் முதல் சூப்பர் பாயின்ட் முயற்சியில் வெற்றி பெற்றாலும் அடுத்த முயற்சியில் தோற்றார். இறுதியில் 15-13 என்ற கணக்கில் வெற்றி பெற்று கடைசி செட்டில் ஐதராபாத் ஆறுதலடைந்தது. இப்போட்டியில் 4-1 என்ற கணக்கில் சென்னை வெற்றி பெற்று 2 புள்ளிகளை ஈட்டியது. இத்தொடரில் சென்னை பெறும் முதல் வெற்றி இதுவாகும். சென்னை வீரர்களின் கச்சிதமான ஒருங்கிணைந்த ஆட்டமே இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
கடைசி செட்டிலும் வென்றிருந்தால் புரோ வாலிபால் லீக் வரலாற்றில் எதிரணியை அனைத்து ஐந்து செட்டுகளிலும் வீழ்த்தி முதல் வாஷ் அவுட் வெற்றியை பெற்ற அணி என்ற பெருமையை சென்னை பெற்றிருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பு நழுவியது. சென்னை அணியில் நவீன் ராஜா ஜேகப் அதிகபட்சம் 16 புள்ளிகள் எடுத்தார் வெராஃப் 10, சொரோகின்ஸ் 13 புள்ளிகள் எடுத்தனர். அகின் ஜி.எஸ். 8 புள்ளி எடுத்தார். சென்னை ஸ்பார்டன்ஸ் அணி அடுத்து 11ம் தேதி கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.