ரூபே புரோ வாலிபால் லீக்கில் 2வது அரையிறுதி போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணியுடன் மோதுகிறது. சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் இப்போட்டி நடக்கிறது. முன்னதாக அகமதாபாத்துடன் நடந்த கடைசி லீக் போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி 4-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. இதில் வெராஃப் சிறப்பாக ஆடி 20 புள்ளி எடுத்தார். வெராஃபின் சிறப்பான ஆட்டம் அணியின் ஒட்டுமொத்த வீரர்களும் சிறப்பாக ஆட தூண்டுகோலாக அமைந்தது என்கிறார் சென்னை ஸ்பார்டன்ஸ் தலைமை பயிற்சியாளர் எம்.எச். குமரா. ரஸ்லான்ஸ் சொரோக்கின்ஸ் ஆட்டமும் நன்றாக இருந்தது என்கிறார் குமரா. தங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார் குமரா.

லீக் சுற்று முடிவில் காலிகட் ஹீரோஸ் 11, கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் 8, சென்னை ஸ்பார்டன்ஸ், யு மும்பா வாலி அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்று முதல் 4 இடங்களில் இருந்தன. மும்பையை விட சென்னை அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் இருந்ததால் அதற்கு 3வது இடம் கிடைத்தது. லீக் சுற்றில் கொச்சி அணியிடம் சென்னை தோற்றிருந்தது. இந்நிலையில் கொச்சியுடனான போட்டிக்கு நன்றாக தயாராக வேண்டியிருப்பதாகவும் மாறுபட்ட ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியிருப்பதாகவும் குமரா கூறுகிறார். இக் கருத்தை கேப்டன் ஷெல்டன் மோசஸும் ஏற்கிறார்.

கொச்சி உடனான போட்டியில் செய்த சிறு தவறுகளே தோல்விக்கு காரணமாகிவிட்டதாக கூறுகிறார் மோசஸ். இம்முறை அதுபோன்ற தவறுகளை களைவது அவசியம் என்கிறார் மோசஸ். எதிரணியினர் எப்படி ஆடுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். இந்த முறை சொந்த களத்தில் நிச்சயம் வெல்வோம் என்கிறார் சென்னை அணி கேப்டன். அகமதாபாத்துக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற வெராஃப் இந்த சீசனில் 80 புள்ளிகளை குவித்து முதலிடத்தில் உள்ளார். அகமதாபாத்துக்கு எதிரான போட்டியில் 20புள்ளி எடுத்தது மூலம் அரையிறுதிக்கு வர முடிந்தது என கூறும் வெராஃப், அரையிறுதியிலும் ஜெயிக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். சென்னை ஸ்பார்டன்ஸ் உரிமையாளரான கால்ஸ் குழுமம் தமிழகத்தில் வாலிபாலை வளர்ப்பதில் கடந்த 30 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறது.