முதல் ரூபே புரோ வாலிபால் லீக் கொச்சியில் இன்று தொடங்கியது. இதில் நட்சத்திர வீரர்கள் நிறைந்த சென்னை ஸ்பார்டன்ஸ் அணி தன் முதல் போட்டியில் காலிகட் ஹீரோஸ் உடன் கொச்சியில் நாளை விளையாடுகிறது. இத்தொடருக்கான பயிற்சியில் வீரர்கள் திறனை அதிகரிக்க பயிற்சியாளர் எம் எச் குமரா பெரு முயற்சி எடுத்ததாக சென்னை ஸ்பார்டன்ஸ் அணி மேலாளர் நடராஜன் ஜெயகுமார் கூறியுள்ளார். தாக்குதல், தற்காப்பு, தடுப்பு, செட்டிங் என அனைத்து பிரிவுகளிலும் அவர் கவனம் செலுத்தியதாக மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் புரோ வாலிபால் லீக் தொடரில் இவ்விரு அணிகளை தவிர அகமதாபாத் டிபென்டர்ஸ், பிளாக் ஹாக்ஸ், கொச்சி ப்ளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி ஆகிய 4 அணிகளும் பங்கேற்கின்றன. ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் போட்டிகளில் முதல் 4 இடம் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப்புக்கு முன்னேறும். இத்தொடரின் 2வது கட்டம் பிப்ரவரி 16 முதல் 22 வரை சென்னையில் நடைபெறுகிறது. ஷெல்டன் மோசஸ் தலைமையிலான ஸ்பார்டன்ஸ் அணி அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்டுள்ளது. ஒலிம்பியன் ரஸ்லான்ஸ் சரோக்கின்ஸ் (லாட்வியா, அட்டாக்கர்), ரூடி வெராஃப் (கனடா, யுனிவர்சல்) ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். பிளாக்கர் அகின் ஜி எஸ், அர்ஜுனா விருது பெற்ற செட்டர் கே ஜே கபில் தேவ் ஆகியோரும் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். அனுபவம், இளமை என சரியான கலவையுடன் வலிமையான அணியாக உள்ள சென்னை ஸ்பார்டன்ஸ் அணிக்கு பிளே ஆஃபுக்கு தகுதிபெறுவதே முதல் இலக்கு என கூறுகிறார் கேப்டன் மோசஸ். சென்னையில் அடுத்த கட்டம் நடப்பதால் ரசிகர்களின் ஆதரவை பெறுவது சுலபம் என்கிறார் அவர். தொடரை விறுவிறுப்பு நிறைந்ததாக மாற்றவும் பார்வையாளர் நலன் கருதியும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரவுண்டு ராபின் போட்டிகளில் 5 செட்டுகள் இருக்கும். 15 புள்ளிகளை முதலில் எடுத்த அணி அந்த செட்டை வெல்லும். ஆனால் பிளே ஆஃபில் ஒரு செட்டை வெல்ல 25 புள்ளி எடுக்க வேண்டும். வென்ற அணிக்கு 2 புள்ளிகள் கிடைக்கும். ஒரு போட்டியில் 5 -0 என வென்றால் 3 புள்ளிகள் வழங்கப்படும்.

சூப்பர் சர்வ், சூப்பர் பாயின்ட் ஆகிய நடைமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. சர்வ் செய்யும் அணியின் ஏஸ் ஒவ்வொன்றுக்கும் 2 புள்ளிகள் தரப்படும். இது சூப்பர் சர்வ் ஆக கருதப்படும். ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு செட்டிலும் ஒரு முறை சூப்பர் பாயின்ட் கோர முடியும். சூப்பர் பாயின்ட் கோரிய அணி அந்த புள்ளியை வென்றால் ஒரு புள்ளிக்கு பதில் 2 புள்ளி வழங்கப்படும். ஆனால் இப்புள்ளியை வெல்லத்தவறும் பட்சத்தில் எதிரணிக்கு 2 புள்ளி தரப்படும். ஒரு அணி 11 புள்ளியை எட்டும் முன் மட்டுமே சூப்பர் பாயின்ட் கோர முடியும். இப்புள்ளிகளை மேற்கொண்டு எடுத்துச்செல்ல முடியாது. ஸ்பார்டன் அணி கால்ஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகும். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக கால்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு இக்குழுமம் முக்கிய பங்காற்றியுள்ளது.”புரோ வாலிபால் லீக் போன்றதொரு தருணத்தைத்தான் நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்” என்கிறார் ஸ்பார்டனின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் மற்றும் பிராண்டிங் அதிகாரி டாக்டர் உப்பிலியப்பன் கோபாலன். 3 வாரங்கள் சிறப்பான ஆட்டத்தை வழங்க தங்கள் அணி தயாராக உள்ளதாக கூறுகிறார் இவர். அனைத்து போட்டிகளும் சோனி சிக்ஸ் மற்றும் சோனி டென் 3 ல் நேரலையில் ஒளிபரப்பாகின்றன. இதுதவிர சோனி LIVலும் நேரலையில் இதை காணலாம்.