ரூபே புரோ வாலிபால் லீக் இறுதிப்போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி காலிகட் ஹீரோஸ் அணியை நாளை எதிரகொள்கிறது. இப்போட்டியில் வெல்வது மூலம் புரோ வாலிபால் லீக்கின் முதல் பட்டம் வென்ற வரலாற்று சிறப்பை சென்னை பெறும். சென்னை ஜவகர்லால் தேரு உள்ளரங்கில் இப்போட்டி நடக்கிறது. இத்தொடரில் காலிகட் வலிமையான அணியாக திகழ்கிறது. லீக்கில் அனைத்து போட்டிகளிலும் வென்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்ற இந்த அணி லீக் சுற்றில் சென்னை அணியை 4-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தது. ஆனால் சென்னை ஸ்பார்டன்ஸ் வீரர்கள் தங்கள் சில ஆச்சரியமூட்டும் வித்தைகள் மூலம் எதிரணிக்கு ஆபத்தானவர்களாக விளங்கினர். கொச்சிக்கு எதிரான அரையிறுதியில் 1-2 என்ற செட் கணக்கில் பின் தங்கியிருந்த சென்னை பின்னர் அதிரடியான ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக காலிகட் திகழ்ந்தாலும் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு ஊக்கம் தரும் என கூறுகிறார் சென்னை ஸ்பார்டனின் நட்சத்திர வீரர் சொரோக்கின்ஸ். கொச்சிக்கு எதிராக அரையிறுதியில் ஆடிய அதே ஆட்டத்தை இறுதி போட்டியில் வெளிப்படுத்தினாலே கோப்பையை வெல்ல முடியும் என்கிறார் சொரோக்கின்ஸ். லாட்விய வீரரான சொரோக்கின்ஸ் அரையிறுதியில் 17 புள்ளிகளை குவித்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார். அணியில் அனைவரும் தங்கள் முழுத்திறமையை வெளிப்படுத்தினர். நானும் ரசித்து ஆடினேன். அணியின் வெற்றிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன் என்கிறார் சொரோக்கின்ஸ்.

அரையிறுதி வெற்றியில் அனுபவ வீரர் கபில்தேவின் பங்கு சிறப்பாக இருந்தது என அணி தலைமை பயிற்சியாளர் எம்எச் குமராவும் கேப்டன் ஷெல்டன் மோசஸும் கூறுகின்றனர். நிலைமையை கபில்தேவ் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்தார் என்றும் அணியாக அனைவரும் நன்றாக ஆடியதாகவும் குறிப்பிடுகிறார் மோசஸ். மேலும் ரசிகர்களின் ஆதரவும் தங்களுக்கு உதவியது என்கிறார் மோசஸ். அரையிறுதிப் போட்டியில் கபில்தேவ் தன் பன்முகத்திறமையை காட்டியதாக கூறுகிறார் குமரா. மிகச்சிறந்த செட்டர் என கபில்தேவ் நிரூபித்து விட்டதாகவும் குமரா கூறுகிறார். சென்னை ஸ்பார்டன்ஸ் அணியை நிர்வகிக்கும் கால்ஸ் குழுமம் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் வாலிபால் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறது.