ரூபே புரோ வாலிபால் லீக் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் மற்றும் காலிக்கட் ஹீரோஸ் அணிகள் மோதின். அரையிறுதிப்போட்டிகளில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி கொச்சி புளூஸ்பைக்கர்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. மற்றொரு அரையிறுதியில் காலிக்கட் ஹீரோஸ் அணி யு மும்பா வாலியை வென்றிருந்தது. முன்னதாக லீக் சுற்றில் காலிக்கட் அணி அனைத்து 5 போட்டிகளிலும் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்திருந்தது. சென்னை ஸ்பார்டன்ஸ் அணி 5 போட்டிகளில் 2 வெற்றியுடன் அரையிறுதியில் நுழைந்திருந்தது. இந்நிலையில் புரோ வாலிபால் லீக்கில் முதல் மகுடம் யாருக்கு என்ற பெரும் எதிர்பார்ப்புடன் இறுதிப்போட்டி தொடங்கியது. சென்னை ஜவகர்லால் நேரு உள்ளரங்கில் இப்போட்டி நடைபெற்றது.

சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் நவீன் ராஜா கலக்கலான ஒரு ஸ்பைக் மூலம் ஆட்டத்தின் முதல் புள்ளியை வென்றார். இதன் பின் நவீனும் வெராஃபும் அடுத்தடுத்து புள்ளிகளை எடுத்து அணியை முன்னெடுத்து சென்றனர். முடிவில் வெராஃப் நல்லதொரு ஸ்பைக் மூலம் முதல் செட்டை சென்னை ஸ்பார்டன்ஸ் 15-11 என்ற கணக்கில் வென்றது. 2 வது செட்டில் காலிக்கட் அணி அடுத்தடுத்து தவறுகள் செய்ததால் சென்னையின் புள்ளிக்கணக்கு மளமளவென உயர்ந்தது. எனினும் பின்னர் காலிக்கட் வீரர்கள் கடுமையான போட்டி தந்ததால் ஆட்டம் விறுவிறுப்பாக நகர்ந்தது. சூப்பர் பாயின்ட் எடுத்த வெராஃப், கச்சிதமான ஒரு பிளாக் மூலம் 2வது செட்டில் வெற்றிக்கான புள்ளியை எடுத்துத் தந்தார்.

முதல் 2 செட்டுகளையும் கோட்டை விட்ட காலிக்கட் 3வது செட்டில் சுதாரித்துக்கொண்டு புள்ளிகளை குவித்தது. அந்த அணி 13-10 என வலுவாக இருந்த நிலையில் நவீன் ராஜாவும் அகினும் சென்னையை முன்னுக்கு கொண்டுவந்தார். இறுதிக் கட்டத்தில் எதிராணி வீரர் ஜெரோம் வினித் செய்த தவறுகள் சென்னைக்கு வெற்றிக்கான புள்ளியையும் சாம்பியன் பட்டத்தையும் பெற்றுத்தந்தது. 15-11, 15-12, 16-14 என்ற செட் கணக்கில் சென்னை ஸ்பார்டன்ஸ் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று முதலாவது புரோ வாலிபால் லீக் பட்டத்தை கைப்பற்றியது. கேப்டன் ஷெல்டன் மோசஸ் உள்ளிட்ட வீரர்கள் வெற்றிக்கோப்பையுடன் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தனர்.

இறுதிப்போட்டியில் சென்னை தரப்பில் வெராஃப் அதிகபட்சமாக 13 புள்ளி எடுத்தார். நவீன் ராஜா 8, அகின் 5, சொரோக்கின்ஸ் 3 புள்ளி எடுத்தனர். இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிப்போட்டியில் நுழைந்திருந்த காலிகட்டை சென்னை இறுதிப்போட்டியில் எளிதாக வீழ்த்தி பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இத்தொடரில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணியின் ரூடி வெராஃப் அதிகபட்சமாக 106 பாயின்ட்டுகளை எடுத்தார். சென்னையின் நவீன் ராஜா 17 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்தார். அதிக புள்ளிகள் எடுத்த அணிகள் பட்டியலில் 436 புள்ளிகளுடன் சென்னை 2வது இடம் பிடித்தது.