ரூபே புரோ வாலிபால் லீக் தொடரில் விறுவிறுப்பை ஏற்படுத்த சூப்பர் சர்வ், சூப்பர் பாயின்ட் முறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறையை விரைவாக புரிந்து கொண்டு சரியான சமயத்தில் கையாள சென்னை ஸ்பார்டன்ஸ் திட்டமிட்டுள்ளது. காலிகட் ஹீரோஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் துடிப்பாக ஆடிய சென்னை ஸ்பார்டன்ஸ் அணிக்கு வெற்றி வசமாகவில்லை. இந்நிலையில் அடுத்து வரும் போட்டிகளில் தமது அணி மீண்டு வரும் என தலைமை பயிற்சியாளர் எம்.எச்.குமரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த போட்டிகள் ஆர்வமூட்டுவதாக இருந்தாலும் புதிய சூழலை புரிந்துகொண்டு அதற்கேற்ப தயாராக வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் அவகாசம் தேவைப்படுவதாக குமரா தெரிவித்தார். முதல் போட்டிக்கு பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
சர்வ் செய்யும் ஒவ்வொரு அணியும் ஏஸ் செய்யும்போது 2 புள்ளிகளை பெறும். இது சூப்பர் சர்வ் எனப்படுகிறது. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு செட்டின் போதும் சூப்பர் பாயின்டுக்கு முயற்சிக்கலாம். அந்த முயற்சியில் வென்றால் 2 புள்ளிகள் கிடைக்கும். தோற்றால் எதிரணிக்கு 2 புள்ளி கிடைக்கும். ஆனால் 11 புள்ளிகளை எடுக்கும் முன்பு மட்டுமே சூப்பர் பாயின்ட் கோர முடியும். மேலும் அப்புள்ளிகளை மேற்கொண்டு எடுத்து செல்ல முடியாது.

“சர்வீஸ் உடைய மதிப்பு வீரரின் மனதில் உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முதல் போட்டியில் நாங்கள் நன்றாகவே சர்வ் செய்தோம். ஆனால் அதை முழு போட்டியிலும் சிறப்பாக செய்யவில்லை” என்கிறார் குமரா. “எங்கள் வீரர்கள் நன்கு விளையாடுவார்கள் என்றும் இத்தொடரில் தாங்கள் மீண்டு வருவது உறுதி” என்றும் கூறுகிறார் குமரா. சென்னை ஸ்பார்டன்ஸ் அடுத்து 7ம் தேதி ஐதராபாத் பிளாக்ஹாக்சை சந்திக்கிறது.

“ஆட்டத்தை சிறப்பாக தொடங்குவது மிக முக்கியம். முதல் போட்டி எங்களுக்கு நல்ல அனுபவமாக அமைந்தது” என்கிறார் கேப்டன் ஷெல்டன் மோசஸ். லீக் சுற்றில் ஒவ்வொரு செட்டும் 15 புள்ளிகள் கொண்டதாக இருக்கும். அதாவது முதலில் 15 புள்ளி எடுப்பவர் அந்த செட்டை வெல்வார். ஒரு போட்டிக்கு 5 செட் இருக்கும். பிளே ஆஃபிலிருந்து ஒரு செட்டில் வெல்ல 25 புள்ளிகள் எடுக்கவேண்டியிருக்கும். வெற்றிபெறும் அணிக்கு 2 புள்ளிகள் தரப்படும். ஒரு அணி 5 செட்டிலும் வெற்றிபெற்றால் 5 புள்ளிகள் வழங்கப்படும். ஸ்பார்டன்ஸ் அணி கால்ஸ் குழுமத்தை சேர்ந்தது. தமிழகத்தில் வாலிபாலை வளர்க்க 30 ஆண்டுகளாக இக்குழுமம் பாடுபடுகிறது.