ரூபே புரோ வாலிபால் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் மற்றும் யு மும்பா வாலி அணிகள் மோதின. இத்தொடரில் ஏற்கனவே 3 போட்டிகளில் ஆடியிருந்த சென்னை அணி ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் இருந்தது. யு மும்பா அணி தான் ஆடிய 3 போட்டிகளிலும் தோற்றிருந்தது. இந்நிலையில் சென்னை ஜவகர்லால் நேரு மைதானத்தில் போட்டி தொடங்கியது. இதற்கு முந்தைய போட்டிகள் கொச்சியில் நடைபெற்றிருந்த நிலையில் இரண்டாவது கட்ட போட்டிகள் சென்னையில் தொடங்கின. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இத்தொடரில் சென்னை ஸ்பார்டன்ஸ் முதல்முறையாக களமிறங்கியது. ஆட்டத்தின் முதல் புள்ளி மும்பைக்கு கிடைத்தது. நவீன் ராஜா செய்த தவறு மூலம் இப்புள்ளி கிடைத்தது. இதன் பின் சென்னை சிறப்பாக ஆடி விறுவிறுவென புள்ளிகளை குவித்து 14-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. எனினும் சொரோக்கின்ஸ், பிறைசூடன், கபில்தேவ் ஆகியோர் செய்த அடுத்தடுத்த தவறுகள் சென்னை அணிக்கு எதிராக திரும்பின. இறுதியில் 15-14 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை மும்பை அணி தனதாக்கியது.
முதல் செட்டை வென்ற அதே வேகத்தில் 2வது செட்டையும் மும்பை வென்று 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.முதல் இரு செட்டுகளை இழந்து சென்னை அணி சற்றே தளர்ந்திருந்த நிலையில் மும்பை அணி புள்ளிகளை குவித்து 3வது செட்டை தனதாக்கி வெற்றியை உறுதிப்படுத்தியது.இதையடுத்து வாஷ் அவுட் தோல்வியை தவிர்க்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்ட சென்னை நான்காவது செட்டில் சிறப்பாக ஆடி புள்ளிகளை குவித்தது. ரூடி வெராஃப் சூப்பர் பாயின்ட் எடுத்து நம்பிக்கையளித்தார். இந்த செட்டை 15-10 என்ற கணக்கில் சென்னை கைப்பற்றியது. அடுத்து இறுதி செட்டிலும் சென்னை அணியின் ஆட்டத்தில் அனல் பறந்தது.
வெராஃப் அபாரமாக சூப்பர் சர்வ் செய்து 2 புள்ளிகளை பெற்றுத்தந்தார். முடிவில் கடைசி செட்டை சென்னை 15-10 என்ற புள்ளிக் கணக்கில் தனதாக்கியது. முடிவாக 14-15, 8-15, 10-15, 15-10, 15-10 என்ற செட் கணக்கில் மும்பை வெற்றிபெற்று இத்தொடரின் முதல் வெற்றியை பெற்றது. இப்போட்டியில் சென்னை தரப்பில் வெராஃப் 20 புள்ளிகளை குவித்தார். அடுத்து அகமதாபாத் டிஃபெண்டர்ஸ் அணியுடன் சென்னை ஸ்பார்டன்ஸ் நாளை மோதுகிறது. இதில் வாஷ் அவுட் வெற்றிபெறும் பட்சத்தில் சென்னை பிளே ஆஃப்புக்கு எளிதாக தகுதிபெறும். இல்லாவிட்டால் பிளே ஆஃப்புக்கு தகுதிபெறுவதில் சிக்கல் ஏற்படும். மும்பை – அகமதாபாத் இடையே நடைபெறும் கடைசி போட்டியின் முடிவின் அடிப்படையில் சென்னையின் வாய்ப்பு இருக்கும்.