முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 14–வது லீக் ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, ஆமதாபாத் டிபென்டர்சுடன் மல்லுக்கட்டியது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் அபாரமாக ஆடிய சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி 15–6, 13–15, 15–13, 15–11, 15–12 என்ற செட் கணக்கில் ஆமதாபாத்தை வீழ்த்தியது. சென்னை அணியில் ருடி வெரோவ் 20 புள்ளிகளும், நவீன் ராஜா ஜேக்கப், ருஸ்லான்ஸ் சோரோகின்ஸ் தலா 17 புள்ளிகளும் சேகரித்து வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர். 5–வது லீக்கில் விளையாடி 2–வது வெற்றியை ருசித்த சென்னை அணி இதன் மூலம் அரைஇறுதியை உறுதி செய்தது. இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் 15–வது மற்றும் கடைசி லீக்கில் ஆமதாபாத் டிபென்டர்ஸ்– யு மும்பா வாலி அணிகள் மோதுகின்றன.