புரோ வாலிபால் லீக் தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில், கோழிக்கோடு ஹீரோஸ் அணியை நேர் செட்களில் வீழ்த்திய சென்னை ஸ்பார்டன்ஸ் அணி கோப்பையை முத்தமிட்டது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்றில் முதல் 4 இடங்களைப் பிடித்த கோழிக்கோடு ஹீரோஸ் (11 புள்ளி), கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் (8), சென்னை ஸ்பார்டன் (4), யு மும்பா (4) அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. பிளேக் ஹாவ்க் ஐதராபாத் (4), அகமதாபாத் டிபண்டர்ஸ் (0) அணிகள் வெளியேற்றப்பட்டன.

முதலாவது அரை இறுதியில் கோழிக்கோடு ஹீரோஸ் 3-0 என்ற நேர் செட்களில் யு மும்பா வாலி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 2வது அரை இறுதியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி 3-2 என்ற செட் கணக்கில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணியை போராடி வென்று பைனலுக்கு முன்னேறியது. இந்த நிலையில், சென்னை நேரு உள்ளரங்கில் நேற்று நடந்த விறுவிறுப்பான பைனலில் சென்னை ஸ்பார்டன்ஸ் – கோழிக்கோடு ஹீரோஸ் அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த சென்னை ஸ்பார்டன்ஸ் 15-11, 15-12, 16-14 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.