சென்னை: புரோ வாலிபால் முதல் சீசன் போட்டியின் இறுதிப் போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் – கோழிக்கோடு ஹீரோஸ் அணிகள் இன்று சென்னையில் மோத உள்ளன. ஐபிஎல், ஐஎஸ்எல், புரோகபடி போன்று வாலிபால் விளையாட்டின் வணிக போட்டியாக புரோ வாலிபால் போட்டி இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. கொச்சியில் பிப்.2ம் தேதி போட்டிகள் தொடங்கின சென்னை ஸ்பார்டன்ஸ், காலிகட் ஹீரோஸ்(கோழிக்கோடு), கொச்சி புளூ ஸ்பைகர்ஸ், யு மும்பா வாலி(மும்பை), அகமதாபாத் டிபன்டர்ஸ், பிளாக் ஹாக்ஸ் ஐதராபாத் என மொத்தம் 6 அணிகள் விளையாடின. இதில் கொச்சி, கோழிக்ேகாடு, சென்னை, மும்பை அணிகள் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றன. அரையிறுதிப்போட்டிகள் சென்னையில் நடைப்பெற்றன. முதல் அரையிறுதிப் போட்டியில் கோழிக்கோடு அணி மும்பை அணியை 3-0 என நேர் செட்டில் வீழ்த்தியது. அரையிறுதிக்கு தகுதி பெறுமா என சந்தேகத்தில் இருந்த சென்னை அணி அதிரடியாக கொச்சி அணியை 3-2 என்ற செட்களில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றது. சென்னையில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் கோழிக்கோடு ஹீரோஸ் அணிகள் மோதுகின்றன.

கோழிக்கோடு அணி லீக் போட்டிகளில் 5 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளிலும் வெற்றிப் பெற்றது. இதுவரை தோல்வியையே சந்திக்காத, வலுவான அணியாக காலிகட் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. லீக் போட்டியில் கோழிக்கோடு அணியிடம் 4-1 என்ற செட் கணக்கில் சென்னை தோற்றுள்ளது. ஆனால் சென்னை அணி தட்டுதடுமாறிதான் இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. லீக் போட்டியில் 5 ஆட்டங்களில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வென்றது. அதே நேரத்தில் ஒரு போட்டியில் கூட நேர் செட்களில் தோற்கவில்லை. அது சென்னை அணிக்கு பலமாக இருக்கிறது. அதனால்தான் அரையிறுதியில் கொச்சி அணியிடம் தொடர்ந்து 2 செட்களை இழந்தாலும் அடுத்த செட்களில் எழுச்சியுடன் விளையாடி சென்னை வெற்றிப் பெற்றது. லீக் போட்டியில் கோழிக்கோடு அணியிடம் 4-1 என்ற செட் கணக்கில் சென்னை தோற்றுள்ளது.